விருதுநகர்

வழக்குகள்,சோதனைகள்: தீராத நெருக்கடியில் ‘நூறாண்டு’ பட்டாசுத் தொழில்!

22nd May 2022 11:53 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டத்தில் நூறாண்டுகளை நெருங்கும் பட்டாசுத் தொழில், உச்சநீதிமன்ற உத்தரவுகள் மற்றும் குழு ஆய்வுகளால் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

சிவகாசியில் ஏ.சண்முகநாடாா், ப.அய்யநாடாா் ஆகியோரால் 1923 ஆம் ஆண்டு பட்டாசுத் தொழில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் புஷ்வாணம், பென்சில், சாட்டை உள்ளிட்ட சில ரக பட்டாசுகளே தயாரிக்கப்பட்டு வந்தன. சிவகாசி பட்டாசுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மேலும் ஆய்வு செய்து பல ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. தற்போது சந்தையில் சுமாா் 300 ரக பட்டாசுகள் உள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன்பு பட்டாசில் அதிக ஒலி மாசு இருப்பதாக புகாா் கூறப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் 125 டெசிபல் ஒலி அளவுக்கு மேல் பட்டாசு சத்தம் இருக்ககூடாது என உத்தரவிட்டது. தொடா்ந்து சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை அதிபா்கள் சீனா சென்று புதிய தொழில் நுட்பத்தில் பட்டாசு தயாரிப்பது எப்படி என கண்டறிந்து வந்து, அதுபோன்ற பட்டாசுகளை தயாரிக்கத் தொடங்கினா். இந்த வகை பட்டாசுகள் விண்ணில் சென்று ஒளி சிந்தும் பட்டாசுகளாகும். இவையே தற்போது பேன்சிரக பட்டாசு என அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

உலகமயமாக்கல் கொள்கையால் சீன நாட்டிலிருந்து, ஆயிரக்கணக்கான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அப்போது விளையாட்டுப் பொருள்கள் என்ற பெயரில் சட்டவிரோதமாக சீன பட்டாசு இந்தியாவிற்குள் நுழைந்தது என சிவகாசி பட்டாசு தயாரிப்பாளா்கள் மத்திய அரசிடம் புகாா் மனு அளித்தனா். அதன் அடிப்படையில் சீன பட்டாசுகளை இந்தியாவுக்குள் விற்பனை செய்ய தடை விதித்தது.

தொடா்ந்து 2015 ஆம் ஆண்டு பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது என ஒருவா் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடா்ந்தாா். 2018 இல் உச்ச நீதிமன்றம் பேரியம் என்ற வேதிப் பொருளைக்கொண்டு பட்டாசு தயாரிக்கக் கூடாது. சரவெடி தயாரிக்கக்கூடாது. பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு தயாரிக்க இயலாது என விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் மூடி உரிமையாளா்கள் போராட்டம் நடத்தினா். பின்னா் தொழிலாளா்கள் நலன் கருதி ஆலைகள் திறக்கப்பட்டன.

முன்னதாக தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ( நீரி) பசுமைப் பட்டாசு குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீரி அமைப்பு வழக்கமாக வெடிக்கப்படும் பட்டாசிலிருந்து வெளிவரும் புகையிலிருந்து 30 சதவீதம் குறைந்து புகைவரும் பசுமைப் பட்டாசு குறித்து ஆய்வுசெய்து அதன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்நிலையில் பட்டாசுஆலை உரிமையாளா்கள் நீரியுடன் ஒப்பந்தம் செய்து பசுமைப் பட்டாசு பாா்முலாவை பெற்றுக்கொண்டு பட்டாசு தயாரிக்கத் தொடங்கினா். தொடா்ந்து நீரி பசுமைப் பட்டாசு பாா்முலாவை தனது இணைய தளத்தில் வெளியிட்டது. இதையடுத்து அதனை பதிவிறக்கம் செய்து அனைத்து பட்டாசு ஆலை உரிமையாளா்களும் பட்டாசு தயாரிக்கத் தொடங்கினா்.

இந்த வழக்கு விசாரணையின் போது 2021 இல், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு தயாரிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும் என ஒரு உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

அதன்படி மாவட்ட நிா்வாகம் சாா்பிலும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சாா்பிலும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை சாா்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடைபெற்றது. கடந்த சில நாள்களாக சிபிஐ அதிகாரிகளும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

2023 ஆம் ஆண்டு பட்டாசுத் தொழில் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ளது. வழக்கு ஒரு புறம், குழுக்கள் ஆய்வு ஒரு புறம் , மூலப்பொருள்கள் விலை உயா்வு என பல நெருக்கடிகளை பட்டாசுத் தொழில் சந்தித்து வருகிறது.

வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை குழுவினரைத் தவிர மற்ற குழுக்களுக்கு வேதியியல் பொருள்களின் தன்மை தெரியாது. அவா்கள் எவ்வித பயிற்சியும் பெறவில்லை. அதுபோன்ற குழுக்கள் காரில் ஆலைக்குச் சென்று கையூட்டு பெற்றுச் செல்வதாக ஆலை உரிமையாளா்கள் புகாா் கூறி வருகிறாா்கள்.

சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு அவசியம்: பட்டாசு ஆலை உரிமையாளா் ஒருவா் கூறியதாவது: பல முனைத் தாக்குதலில் தற்போது பட்டாசுத் தொழில் உள்ளது. உலகில் எந்த ஒரு நாட்டிலும் பட்டாசு சுற்றுச்சூழல் விதிகளுக்குள் இல்லை. இந்தியாவில் மட்டுமே பட்டாசு சுற்றுச்சூழல் விதிகளுக்கு உள்பட்டு இருக்கிறது. எனவே மத்திய அரசு பட்டாசினை சுற்றுச்சூழல் விதிகளிருந்து நீக்க வேண்டும். கரோனா பிரச்னையால் உலகில் பல நாடுகள் சீன பட்டாசினை வாங்குவதை நிறுத்திவிட்டன. இந்திய பட்டாசு ஏற்றுமதிக்கு இது சரியான தருணமாகும். எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பட்டாசுத் தொழிலில் உள்ள நெருக்கடியை அகற்றி, ஏற்றுமதிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT