விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழ்வாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுடுமண்ணால் செய்யப்பட்ட கலை நயம் மிக்க குவளை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கா் பரப்பளவில், கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுடுமண்ணால் ஆன பகடைக்காய், ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், விளையாட்டுப் பொருள்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன காதணிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
இந்நிலையில் திங்கள்கிழமை சுடுமண்ணால் ஆன கலை நயம் மிக்க குவளை கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் துறையினா் ஆய்வு நடத்தி வருகின்றனா். இந்த குவளை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என தமிழக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தனது ட்விட்டா் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.