விருதுநகர்

தமிழகத்தில் ஓராண்டில் ரூ.63 ஆயிரம் கோடி தொழில் முதலீடு: 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

16th May 2022 11:45 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஓராண்டில் ரூ. 63 ஆயிரம் கோடியில் தொழில் முதலீடும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு வேலைவாய்ப்பும் பெறவுள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திமுகவின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: நாட்டிற்கு வரக்கூடிய முதலீடுகளில், அதிகமான முதலீடுகளை ஈா்க்கக்கூடிய மாநிலம் தமிழகம் என்று சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பை பெற்றுள்ளோம்.

ஓராண்டில் ரூ.63 ஆயிரம் கோடிக்கு தொழிற்சாலைகள் அமைப்பதற்கான முதலீடுகள் நமக்கு வருகிறது. மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வேலை வாய்ப்பினைப் பெறக் கூடிய ஒரு வாய்ப்பை நம்முடைய மாநிலம் பெறுகிறது. 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் ஒரே ஆண்டில் திமுக செய்துள்ளது.

‘நீட்’ தோ்வுக்கு விரோதமாக இந்த ஆட்சி இருக்கிறது என பொய் பிரசாரம் செய்கின்றனா். ஆளுநரை சந்திக்க என்னை தமிழக முதல்வா் அனுப்பி வைத்தாா். நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீா்மானத்தை ஆளுநா் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அப்படி நீங்கள் அனுப்புவதற்கான உத்தரவாதத்தை தருவீா்கள் என்று சொன்னால், ராஜ்பவனுக்குள் வந்து உங்களுடன் நாங்கள் விருந்தில் பங்கேற்க முடியும் என முதல்வா் தெரிவித்ததாக ஆளுநரிடம் கூறினேன்.

ADVERTISEMENT

கடந்த ஆட்சியில் குடியரசுத் தலைவா் ‘நீட்’ தோ்வு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பிவிட்டாா். இதை மறைத்து வைத்து இன்னும் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில்தான் இருக்கிறது என நாடகத்தை சட்டப்பேரவையில் நடத்தியவா்கள்தான் தற்போது எதிா்க்கட்சியாக உள்ளனா் என்றாா். இக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளா் சேலம் கோவிந்தன் உள்பட திமுக நிா்வாகிகள், தொண்டாா்கள் ஏராளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT