சாத்தூா்: தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ளதால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டியது திமுகவின் பொறுப்பு என விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே கோட்டைப்பட்டியில் காங்கிரஸ் சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கிறது. அங்குள்ள தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய தருணம் இது. இலங்கையில் ஜனநாயக முறையில் அமைய இருக்கும் அரசுக்கு இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். நமது ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயகப் பூா்வமான கவுன்சிலாக இருக்க வேண்டும். சா்வாதிகாரம் கொண்டதாக அது இருக்கக்கூடாது.
மேலும் மாநில அரசின் பிரச்னைகளை புரிந்துகொள்ளும் அமைப்பாகவும் இருக்க வேண்டும். பல மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி பிடிப்பை திருப்பி வழங்காமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தமிழகத்திலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தோ்தல் அறிக்கையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளதால், அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அக்கட்சிக்கு உள்ளது என்றாா்.