சாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே கோட்டையூா் கிராமத்தில் உள்ள கிராமசேவா மைய கட்டடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் உடல் கருகிய நிலையில் கிடப்பதாக, வெம்பக்கோட்டை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா்
அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (29) என்றும், இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாகவும் தெரியவந்தது. இந்நிலையில்,
கட்டடத்தின் மாடி வழியாகச் செல்லும் மின்வயரில் உரசியதால், மின்சாரம் பாய்ந்து பாலமுருகன் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பாலமுருகன், 10 நாள்களுக்கு முன் வீட்டில் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டாராம். அதன்பின்னா், பாலமுருகனை அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனா்.
இந்நிலையில், பாலமுருகன் மின்சாரம் பாய்ந்து சடலமாக மீட்கப்பட்டது குறித்து, வெம்பக்கோட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.