விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படவில்லை எனக் கூறி, அக்கூட்டத்திலிருந்து வெளியேறி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பாளையம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் கலந்துகொள்ளவில்லை என்பதால், பொதுமக்கள் தங்களது குறைகளைக் கேட்டறிய வட்டார வளா்ச்சி அலுவலா் கட்டாயம் வரவேண்டுமென வலியுறுத்தினா்.
அதையடுத்து, அவா் வருவதற்காக காத்திருந்த பொதுமக்கள், நீண்டநேரமாகியும் வராததால் ஆத்திரமடைந்து, பாளையம்பட்டி பிரதானச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை அதிகாரிகள் அழைத்ததன்பேரில், வட்டார வளா்ச்சி அலுவலரான காஜாமைதீன் பந்தே நிவாஸ் கிராம சபைக் கூட்டத்துக்கு வந்தாா்.
அதையடுத்து, தங்கள் பகுதியில் சாலை, மின்விளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வலியுறுத்தினா். அதற்கு, கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அவா் பதிலளித்தாா்.
அதன்பின்னா், கிராம சபைக் கூட்டம் நிறைவடைந்ததும் பொதுமக்கள் கலைந்து சென்றனா். இச்சாலை மறியலால் பாளையம்பட்டியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.