விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்

19th Mar 2022 01:46 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக காலையில் செப்புத் தேரோட்டம் நடந்தது.

இக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 8 நாள்களாக ஆண்டாள்- ரெங்கமன்னாா் காலையில் மண்டபம் எழுந்தருளுதலும், இரவு பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் 9 ஆம் திரு நாளான வெள்ளிக்கிழமை ஆண்டாள்- ரெங்கமன்னாா் திருக்கல்யாண நிகழ்ச்சி கோயிலில் உள்ள ஆடிப்பூர மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டுச்சேலை ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு பக்தி கோஷம் முழக்க கோயில் பட்டா் திருமாங்கல்யத்தை ஆண்டாளுக்கு அணிவித்தாா்.

இந்நிகழ்ச்சியைக் காண, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தனா். திருக்கல்யாணம் முடிந்ததும், பக்தா்களுக்கு திருமாங்கல்ய கயிறும், விருந்தும் அளிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

செப்புத் தேரோட்டம்: முன்னதாக காலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது ஆண்டாள் ரெங்கமன்னாா் கோயிலில் இருந்து செப்புத் தேருக்கு அழைத்து வரப்பட்டதும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தி கோஷமிட்டபடி ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். அங்கிருந்து புறப்பட்டத் தோ் கீழரத வீதி, மேலரதவீதி, தெற்குரத வீதி, வடக்கு ரதவீதி என நான்கு ரத வீதிகளில் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதையொட்டி நகரில் சிறிது நேரம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் மேகநாத ரெட்டி, குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளா் கீதா தலைமையில் நகர போக்குவரத்து காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT