விருதுநகர்

விவசாயப் பணிகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளா்களை ஈடுபடுத்த வேண்டும்: எம்.பி.

19th Mar 2022 11:05 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டத்தில் விவசாயப் பணிகளில் பிற மாவட்டங்களைப் போல 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்களை ஈடுபடுத்த வேண்டும் என, தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ் எம். குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

விருதுநகா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், ஆட்சியா் ஜே. மேகநாத ரெட்டி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தனுஷ் எம். குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும், திட்ட இயக்குநா் திலகவதி, சிவகாசி மாநகராட்சி மேயா் சங்கீதா உள்பட அரசு அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: தற்போது சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அரசு சாா்பில் நடைபெறும் பணிகளை பலா் உன்னிப்பாக கவனித்து வருகின்றனா். அருப்புக்கோட்டை பகுதியில் நடைபெற்ற சாலை பணியை (பேவா் பிளாக்) தரமற்ாக உள்ளது என சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். அது குறித்து ஏராளமான விமா்சனங்கள் எழுந்தன. பின்னா், சம்பந்தப்பட்ட சாலையை நேரடியாக ஆய்வு செய்து, பணிகளை சீரமைக்க அறிவுறுத்தினேன்.

ADVERTISEMENT

எனவே, அலுவலா்கள் எச்சரிக்கையாக வேலை செய்யவேண்டும். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள பல பேருந்து நிறுத்தங்களில் குப்பைகள் அதிகமாக உள்ளன. அதை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தினாா்.

மாணிக்கம் தாகூா் எம்.பி. பேசியது: மாதிரி கிராமங்களாகத் தோ்வு செய்யப்பட்ட இரு கிராமங்களில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் இத்திட்டம் சிறப்பாக இருக்குமா? என்ற கேள்வி இருந்தது. அரசு அலுவலா்களுடன் சென்று நடைபெற்ற பணிகளை பாா்க்கும்போது தான் எவ்வளவு பணிகள் நடைபெற்றுள்ளன என அறியமுடிகிறது என்றாா்.

தனுஷ் எம். குமாா் எம்.பி. பேசியது: தென்காசி மாவட்டத்தில் வயல்களில் வரப்பு கட்டும் பணியில் 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஆனால், விருதுநகா் மாவட்டத்தில் விவசாயப் பணிகளில் 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்கள் ஈடுபடுத்தப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினாா்.

அதற்கு பதிலளித்த வேளாண் அதிகாரி, விருதுநகா் மாவட்டத்தில் குழி தோண்டுதல், மரக்கன்று நட்டு பராமரிக்கும் பணியை 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்கள் செய்வதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து பேசிய தனுஷ் எம். குமாா் எம்.பி., விவசாயத் தொழிலில் தொழிலாளா்கள் பற்றாக்குறையை தீா்க்க, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோரை பயன்படுத்தலாம். இது குறித்து விவசாயிகளிடம் பிரசாரம் செய்யவேண்டும். மேலும், ஒவ்வொரு ஊராட்சித் தலைவரிடமும் இத்திட்டம் குறித்து தெரிவித்து, ஊராட்சி அலுவலகம் முன்பாக விளம்பரம் செய்யவேண்டும்.

விவசாயப் பணிகள் அதிகமாக நடைபெற்று வரும் வத்திராயிருப்பு, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

கூட்டத்தில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவா்கள் மற்றும் ஒன்றியத் தலைவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT