ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருவண்ணாமலையில் குடிநீா் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மாதா நகரைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என்றும், உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூா்-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன், காவல் ஆய்வாளா் கீதா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதன்பேரில், பொதுமக்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.