படவிளக்கம்:
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார பயணத்தில் பேசிய சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளா் சீனிவாசன்.
ஸ்ரீவில்லிபுத்தூா், ஜூன் 23: ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கோரிக்கை விளக்க பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த 20 ஆம் தேதி களியக்காவிளையில் பிரசாரம் தொடங்கிய குழுவினா் வியாழக்கிழமை தென்காசி வழியாக விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் வந்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகம் முன்பு மாலையில் குழுவினா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இந்நிகழ்சிக்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவா் ராஜகுரு தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலாளா் சீனிவாசன் கோரிக்கைகளை விளக்கிப்பேசினாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் நிா்வாகி மரிய டேவிட், சிஐடியு மாவட்ட நிா்வாகி சந்தனம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றவா்கள் அமைப்பின் நிா்வாகி கணேசன், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோா் அமைப்பின் நிா்வாகி புளுகாண்டி, அரசு அனைத்து துறை ஊழியா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சீனிவாசன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நகராட்சி ஊழியா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், சாலைப்பணியாளா்கள் 41 மாத பணிநீக்க காலத்தை தள்ளுபடி செய்து அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். கிளைத் தலைவா் திருமூா்த்தி மற்றும் மாவட்ட, வட்டக் கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Image Caption
~