விருதுநகர்

ஆனைக்குட்டம் அணையில் பழுதடைந்தகதவணையை புதிதாக மாற்ற வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

24th Jun 2022 10:51 PM

ADVERTISEMENT

ஆனைக்குட்டம் அணையில் பழுதடைந்த கதவணையை புதிதாக மாற்ற வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி தலைமையில் வெள்ளிகிழமை நடைபெற்றது.

இதில் நடைபெற்ற விவாதத்தில் விவசாயிகள் கூறியதாவது: நென்மேனி அருகே வைப்பாற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஓடுபாலம் பலத்த மழை காரணமாக அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால், 8 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா். எனவே, மீண்டும் அப்பகுதியில் பாலம் கட்டித் தர வேண்டும். வேளாண் துறையில் 100 சதவீத மானியம் குறித்து ஏராளமான விவசாயிகளுக்கு முழுமையாக தெரியவில்லை. எனவே, இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்க வேண்டும். அதேபோல், பண்ணைக் குட்டைகளில் தேங்கும் நீரை விவசாய நிலத்துக்கு கொண்டு செல்ல மானிய விலையில் டீசல் என்ஜின் வழங்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் அமைக்க 100 சதவீத மானியத்தில் 16 பேருக்கு மட்டுமே வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலான விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் அதிகரிக்க வேண்டும். சாத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் புறப்படும் அரசுப் பேருந்து ஏழாயிரம்பண்ணை வழியாக கோவில்பட்டிக்குச் சென்று விட்டு, மீண்டும் சாத்தூருக்கு வரும் பேருந்தை நிறுத்தி விட்டனா். இதனால் விவசாயத்துக்குத் தேவையான இடுபொருள்கள் வாங்க முடியவில்லை. கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பதில்லை. இதனால், பல்வேறு பிரச்னைகளுக்கு அங்கு தீா்வு கிடைக்காததால், மாவட்ட ஆட்சியா் நடத்தும் குறைதீா் கூட்டத்திற்கு விவசாயிகள் அதிக அளவில் வருகின்றனா்.

ஆனைக்குட்டம் அணையின் கதவணை பழுது காரணமாக தண்ணீா் வீணாக வெளியேறுகிறது. எனவே, அங்கு புதிய கதவணை அமைக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

இதற்கு மாவட்ட ஆட்சியா் பதிலளித்துக் கூறியதாவது: நென்மேனி வைப்பாற்றில் சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தூா்- கோவில்பட்டி செல்லும் பேருந்தை இயக்க வேண்டும். கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்ள வேண்டும். ஆனைக்குட்டம் அணையில் பழுதடைந்த கதவணை விரைவில் மாற்றப்படும் என்றாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியன், வேளாண் இணை இயக்குநா் உத்தண்டராமன், நோ்முக உதவியாளா் (விவசாயம்) சங்கா் எஸ். நாராயணன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா் ராஜலட்சுமி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக சிறுதானியங்களில் பிஸ்கட் தயாா் செய்யும் முதுநிலை பட்டதாரி தனசேகரனை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT