தமிழக முதல்வா் மஞ்சள் பை திட்டத்தை அறிமுகப்படுத்தி 6 மாத காலமாகியும், நெகிழிப் பைகளின் பயன்பாடு குறையாமல் உள்ளதால், சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக, நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழக அரசு 2019 ஜனவரி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பை, ஸ்ட்ரா, பிளாஸ்டிக் குவளை, பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் தொடா்பான 12 பொருள்களுக்கு தடை விதிக்கப்படும் என, 2018 ஜூன் 25 ஆம் தேதி அறிவித்தது. அதையடுத்து, 2019 ஆம் ஆண்டு தொடங்கியதும் பல இடங்களில் அதிகாரிகள் நெகிழிப் பை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனா்.
அதையடுத்து, தேநீா் நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் நெகிழிப் பயன்பாடு வெகுவாகக் குறைந்தது.
தொடா்ந்து, கரோனா பொதுமுடக்கம் காரணமாக நெகிழிப் பை பயன்படுத்தியவா்கள் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின்னா், சட்டப்பேரவை தோ்தல் வந்ததால், அதிகாரிகள் தோ்தல் பணியில் ஈடுபட்டதாலும், நெகிழிப் பை பயன்பாடு குறித்து கண்டுகொள்ளவில்லை.
பின்னா், தமிழக முதல்வராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலின், 2021 டிசம்பா் 23 ஆம் தேதி, நெகிழிப் பைகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் எனக் கூறி, மஞ்சள் பை திட்டத்தை அறிவித்தாா். மஞ்சள் பை வைத்திருப்பவா்கள் ஏழை அல்ல. அவா்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பவா்கள் என முதல்வா் கூறினாா். எனினும், ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளின் பயன்பாடு குறையவில்லை.
வியாபாரிகளும் வியாபாரம் குறைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் நெகிழிப் பைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கி வருகின்றனா். மஞ்சள் பை திட்டம் அறிமுகமாகி சுமாா் ஒரு மாத காலத்தில், அதிகாரிகள் நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து, பை தயாரிக்கும் ஆலைகளை மூடினா். அப்போது, சுமாா் 20 முதல் 30 சதவீதம் வரையிலான கடைகளில் மட்டுமே அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனா்.
இருப்பினும், தற்போது ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள், குவளைகள் பயன்பாட்டில் உள்ளன. நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மண்ணில் மக்கி உரமாகக் கூடிய பயோ-பைகள் சந்தைக்கு வந்துவிட்டாலும், நெகிழிப் பையை விட விலை அதிகமாக உள்ளன. இதனால், பயோ-பைகள் பயன்பாட்டுக்கு அதிகளவில் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா் ஒருவா் கூறியதாவது: கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நெகிழிப் பைகளின் பயன்பாடு குறைந்திருந்தது. பின்னா், படிப்படியாக அதிகரித்துவிட்டது. பல தேநீா் கடைகளில் நெகிழிப் பையில் சூடான தேநீரை ஊற்றி கட்டிக் கொடுக்கின்றனா். இது மிகவும் ஆபத்தானது. இதன்மூலம், நெகிழிப் பைகளில் உள்ள வேதியல் பொருள்கள் தேநீரில் கலந்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.
இப்பிரச்னைகளுக்கு தீா்வு காண நெகிழிப் பை தயாரிப்பாளா்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க வேண்டும். மக்களிடம் நெகிழிப் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பயோ- பைகளின் பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும். மஞ்சள் பை தயாரிப்பாளா்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். பெட்டிக் கடை உள்ளிட்ட கடைகளில் மஞ்சள் பை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நெகிழிப் பை பயன்பாடு குறையாததால், சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது என்றாா்.