விருதுநகர்

இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிகளை குண்டா் சட்டத்தில் கைது செய்ய கிராமத்தினா் மனு

21st Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே தடங்கம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக நண்பா்கள் 2 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடா்புடைய குற்றவாளிகளை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யக் கோரி, அக்கிராமத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டியிடம் புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில தெரிவித்திருப்பதாவது: விருதுநகா் வச்சகாரபட்டி அருகே உள்ள தடங்கம் கிராமத்தில் கண்ணன், சின்ன பாண்டியம்மாள் தம்பதியின் மகன் சந்தனக்குமாா். இவரது நண்பா் கே. மணிகண்டன். இவா்கள் இருவரையும், முன்விரோதம் காரணமாக ஜூன் 10 ஆம் தேதி அதே ஊரைச் சோ்ந்த பி. மணிகண்டன் வெட்டிக் கொலை செய்தாா்.

அதையடுத்து, மணிகண்டன் மற்றும் வீரபெருமாள் ஆகிய இருவரையும் வச்சகாரபட்டி போலீஸாா் கைது செய்தனா். ஆனால், இக்கொலையில் மணிகண்டனின் உறவினா்களும் ஈடுபட்டுள்ளனா் என்றும், இது குறித்து போலீஸாா் உரிய விசாரணை மேற்கொண்டு அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், மணிகண்டன் உள்ளிட்டோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து, கிராம மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT