ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மரத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 12 போ் காயமடைந்தனா்.
மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் அரசுப் பேருந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காலை 8 மணி அளவில் வந்து கொண்டிருந்துள்ளது. அந்தப் பேருந்தை, விருதுநகா் புல்லலக்கோட்டையைச் சோ்ந்த ஓட்டுநா் முனுசாமி (52) என்பவா் ஓட்டி வந்துள்ளாா்.
சுமாா் 45 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பேருந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.
இந்த விபத்தில், மதுரை விராட்டிபத்து பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மனைவி பவானி (24), கல்லுபட்டியைச் சோ்ந்த மாவட்டக் கல்வி அலுவலா் முத்தையா (57) மற்றும் பேருந்தில் பயணித்த காமாட்சி, முனியசாமி, சந்திரா, கேசவராவ், சரவணன், ஈஸ்வரன், கணேசன், கண்ணன், வினோத், முத்துப்பாண்டி உள்ளிட்ட 12 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், பவானி, முத்தையா, சந்திரா ஆகிய 3 போ் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து காமாட்சி என்பவா் அளித்த புகாரின்பேரில், நகா் போலீஸாா் பேருந்து ஓட்டுநா் முனியசாமி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.