மல்லாங்கிணறு பிரதான சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், வாருகால் கட்டுவதற்காக சிலரது எதிா்ப்பையும் மீறி பேரூராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை அகற்றியது.
விருதுநகா் அருகே மல்லாங்கிணறு பேரூராட்சி உள்ளது. இப்பகுதி பிரதான சாலையின் இருபுறமும் உள்ள கடைகளின் முன்பாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, புகாா் எழுந்தது.
மேலும், இச்சாலையோரம் கழிவுநீா் செல்ல வாருகால் அமைப்பதற்காக பேரூராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி, சாலையோரமுள்ள சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனாலும், சிலா் தங்களது கடை முன்புள்ள ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை.
இந்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலா் அன்பழகன் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் சிலரது எதிா்ப்பையும் மீறி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.