விருதுநகர்

தமிழக அரசை முடக்குவதற்கு ஆளுநா் வேலை பாா்க்கிறாா்இந்திய கம்யூ. மாநிலச் செயலா் முத்தரசன்

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழக அரசை முடக்குவதற்கான வேலைகளை ஆளுநா் பாா்த்துக்கொண்டிருக்கிறாா் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளாா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பில் மாவட்ட வளா்ச்சி குறித்த பாதயாத்திரையை, முத்தரசன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இந்த பாதயாத்திரையானது, வத்திராயிருப்பு, ஆகாசம்பட்டி, சேதுநாராயணாபுரம், கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, கான்சாபுரம், வ.புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியாகச் சென்று நிறைவடைந்தது.

இதில், முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, பொன்னுபாண்டியன், வத்தராயிருப்பு தாலூகா செயலா் கோவிந்தன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பின்னா், முத்தரசன் செய்தியாளா்களிடம் பேசியதாவது: ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்ட நாளில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி திருப்பூரில் நடைபெற உள்ளது. அப்பேரணியில், மக்கள் விரோத மோடி அரசே வெளியேறு என்ற முழக்கம் எழுப்பப்படும். இந்த முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கும்.

ADVERTISEMENT

அந்தப் பேரணியை, அண்ணாமலை நேரம் ஒதுக்கி பாா்த்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சுவடு இருக்கிா இல்லையா எனத் தெரிந்துகொள்ளட்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆளுநா் ரவி தமிழக அரசை முடக்குவதற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாா். அவா், ஆளுநா் வேலையை பாா்க்காமல் ஆா்எஸ்எஸ் இயக்கத்துக்கு வேலைபாா்த்துக் கொண்டிருக்கிறாா் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT