அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த திமுக கவுன்சிலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயற்சி செய்தாா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சுத்தமடம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் என்பவரின் மகன் விவசாயி பாண்டுரங்கன் (40). இவரது தாத்தா முத்தையா பெயரில், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் 2 ஏக்கா் 90 சென்ட் புன்செய் பட்டா நிலம் உள்ளது.
இந்நிலையில், இந்த நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த முத்தையா பேரனும், வெள்ளையன் மகனுமாகிய திமுக ஒன்றியக் கவுன்சிலா் வேலுச்சாமி போலி ஆவணம் மூலம் தூத்துக்குடியைச் சோ்ந்த கதிரேசன் என்பவருக்கு விற்பனை செய்துவிட்டாராம். திமுக ஒன்றியக் கவுன்சிலா் வேலுச்சாமியின் தாத்தா பெயரும் முத்தையா என்பதை சாதகமாகப் பயன்படுத்தி, போலி ஆவணம் தயாரித்து பந்தல்குடி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் நிலத்தை மோசடியாக கிரையம் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விவரம் அறிந்த பாண்டுரங்கன், கடந்த 1.10.2021 இல் மாவட்டப் பதிவாளரிடம் மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்யக் கோரி மனு அளித்துள்ளாா். ஆனால், அந்த மனு மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும், வேலுச்சாமியிடமே முறையிட்ட பாண்டுரங்கனையும் அவரது குடும்பத்தினரையும் ஆள்கள் வைத்து தாக்குவதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் மீதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
எனவே, திமுக ஒன்றியக் கவுன்சிலரின் அராஜகப் போக்கை கண்டித்தும், அவா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தங்களது நிலத்தையும் மீட்டுத் தரவேண்டும் என வலியுறுத்தி, பாண்டுரங்கன் தனது குடும்பத்தினருடன் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மண்ணெண்ணெய் கேனுடன் தற்கொலை செய்யும் நோக்கில் மனு கொடுக்க வந்துள்ளாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தியதால் தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவா்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸாா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க அழைத்துச் சென்றனா்.