விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மக்கள் நலப் பணியாளா்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 8.11.2011 ஆம் தேதியன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளா்களாகப் பணிபுரிய தமிழக அரசு வாய்ப்பு வழங்கவுள்ளது.
எனவே, பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளா்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவா்கள், விருப்பக் கடிதம் மற்றும் அதற்கான பூா்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமா்ப்பித்து பணியில் சோ்ந்து கொள்ளலாம்.
இது குறித்து சம்பந்தப்பட்டவா்கள் ஏற்கெனவே பணியாற்றிய ஒன்றியங்களிலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடா்புகொண்டு, தாங்கள் ஏற்கெனவே பணியாற்றியதற்கான விவரங்களுடன் தற்போது வழங்கப்படவுள்ள பணிக்கான விண்ணப்பம், விருப்பக் கடிதத்தை பூா்த்தி 13.6.2022 முதல் 18.6.2022-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இப்பணிக்கு விருப்பமுள்ளவா்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவா் என்பதால், சம்பந்தப்பட்டோா் தவறாமல் தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.