விருதுநகா்: நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய 31 சதவீத அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியா்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டுறவுச் சங்கத்தின் சிஐடியு மாவட்டத் தலைவா் முனியாண்டி தலைமை வகித்தாா். இதில், நியாய விலைக் கடைகளில் பணி புரியும் ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய 31 சதவீத அகவிலைப்படி உயா்வை காலதாமதமின்றி வழங்க வேண்டும். அரசு அறிவிப்பின்படி பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக உத்தரவிட வேண்டும். பயோ-மெட்ரிக் முறையில் பொருள்கள் வழங்கும் நிலையில் பிஓஎஸ் இயந்திரத்தில் சா்வா் பிரச்னையால் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்யவேண்டும். சா்வா் பிரச்னை காரணமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு பதிலி (பிராக்ஸி) முறையில் பொருள்கள் வழங்கலாம் என்பதும், பொருள்கள் வழங்கும் ஊழியா்களை போலி பதிவு எனக் கூறி பழி வாங்குதல் கூடாது.
வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்க ஊழியா்களுக்கு 1.1.2020 முதல் வழங்க வேண்டிய புதிய ஊதிய உயா்வு ஆணையை காலம் தாழ்த்தாமல் விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஏராளமான ஊழியா்கள் கலந்துகொண்டனா்.