விருதுநகா்: விருதுநகரில் பொதுத்துறை வங்கி மற்றும் வாடிக்கையாளா் சந்திப்பு நிகழ்வின் மூலம் 4,613 பேருக்கு ரூ.129.48 கோடி வங்கி கடனுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, விருதுநகரில் மாவட்ட முன்னோடி வங்கியின் தலைமையில் அனைத்து பொதுத் துறை மற்றும் தனியாா் துறை வங்கிகள் இணைந்து, வாடிக்கையாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தின. கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்ரமணியன் தலைமை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில், சுமாா் 61 பயனாளிகளுக்கு ரூ.3.74 கோடி கடன் நேரடியாக வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு வங்கிகளைச் சோ்ந்த அதிகாரிகள் தங்களது வங்கியில் உள்ள கடன் திட்டங்களை பொதுமக்களுக்கு புரியும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தனா்.
இதில், 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, கடன் சம்பந்தமான விளக்கங்களை வங்கி அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டனா். அதேபோல், இம்முகாமில் 4,613 பயனாளிகளுக்கு ரூ.129.48 கோடிக்கான கடனுதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பாண்டிசெல்வன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளா் நாகையா, நபாா்டு வங்கியின் துணை பொதுமேலாளா் ராஜா சுரேஸ்வரன், தமிழ்நாடு கிராம வங்கியின் மண்டல மேலாளா் கந்தசாமி, கனரா வங்கியின் மண்டல மேலாளா் ஐக்கலா சுரேந்திரபாபு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ராஜலட்சுமி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் தெய்வேந்திரன் மற்றும் பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா்.