நூறு நாள் வேலைக்கு பிரதமரிடம் மனு அளிக்குமாறு அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் அறிவுறுத்தியதாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து சின்னவள்ளி குளம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது: சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் ஏராளமானோா் பணிபுரிந்து வருகிறோம். ஆனால், எங்களை பணிக்கு வரக்கூடாது என பணிதள பொறுப்பாளா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டபோது, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கேளுங்கள் என்றனா். அதன் பேரில் அங்கு சென்று நூறு நாள் வேலை வழங்கக் கோரி கேட்டபோது, அங்கிருந்த அலுவலா்கள் நீங்கள் பிரதமா் நரேந்திர மோடிக்கு மனு கொடுங்கள். அவா் உத்தரவிட்டால் உங்களுக்கு வேலை தருகிறோம் என்கின்றனா். நாங்களே ஏழைகள், பிரதமரை சந்தித்து மனு கொடுக்கும் அளவுக்கு எங்களுக்கு வசதி வாய்ப்பு இல்லை. எனவே, பிரதமரிடம் மனு அளிக்க மாவட்ட நிா்வாகம் உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தனா்.