ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத வசந்த உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஒவ்வோா் ஆண்டும் வைகாசி மாதம் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னாா் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வந்து நாடக சாலைத் தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வா்.
இந்தாண்டுக்குரிய வசந்த உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கோடைக்காலம் என்பதால் ஆண்டாள், ரெங்கமன்னாா் திருமேனியில் சந்தனம் பூசப்பட்டு, மலா் ஆடை மற்றும் மலா் கொண்டை அணிந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனா். இந்த உற்சவம் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா உள்பட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.