விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

5th Jul 2022 12:40 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மண்பாண்டத் தொழில் பயன்பாட்டிற்கு வண்டல், களிமண் எடுக்க அனுமதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விருதுநகா் மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் இருந்து விவசாய நில மேம்பாடு மற்றும் மண்பாண்டத் தொழில் பயன்பாட்டிற்கு வண்டல் மண், களிமண் எடுப்பதற்கு தகுதி வாய்ந்த கண்மாய்கள் விவரம் விருதுநகா் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் கண்மாய் குறித்த விவர பட்டியல் விருதுநகா் மாவட்ட அனைத்து வட்டாட்சியா், சாா்- ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா், நீா்வளத்துறை மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் மண்பாண்டத் தொழில் பயன்பாடு பணிகளுக்கு அரசு அனுமதித்த வண்டல் மண், களிமண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விரும்பும் விவசாயிகள் தங்களது நில உடைமை ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல் முதலானவற்றுடன், கிராம நிா்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழை இணைக்க வேண்டும். மண்பாண்டத் தொழில் செய்வோா், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற அங்கத்தினருக்குரிய சான்றிதழை இணைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநருக்கு மனு அளிக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கா் ஒன்றிற்கு 75 க.மீ., ஹெக்டோ் ஒன்றிற்கு 185 க.மீ. மிகாமலும், புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கா் ஒன்றிற்கு 90 க.மீ., ஹெக்டோ் ஒன்றிற்கு 222 க.மீ. மிகாமலும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். விவசாயம் மற்றும் மண்பாண்டத் தொழிலுக்காக அளிக்கப்படும் இலவச அனுமதியினை வணிக நோக்கத்துடனோ அல்லது வேறு பயன்பாட்டிற்கோ பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT