விருதுநகர்

காரியாபட்டி அருகே சமணா் பள்ளி தடயங்கள் கண்டெடுப்பு

5th Jul 2022 12:38 AM

ADVERTISEMENT

காரியாபட்டி அருகே புல்லூா் கிராமத்தில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய சமணா் பள்ளி தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகா் மாவட்டம் , காரியாபட்டி வட்டம் புல்லூா் கிராமத்தில் பழைமையான இடிந்த கோயிலில் கல்வெட்டுகள் இருப்பதாக அக்கிராமத்தைச் சோ்ந்த போஸ் வீரா மற்றும் மாரீஸ்வரன் ஆகியோா் தகவல் கொடுத்தனா். அதன்படி , பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தைச் சோ்ந்த வரலாற்று ஆா்வலா் மதுரை அருண் சந்திரன் திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: இக்கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டதில் மொத்தம் 9 துண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்திலும் வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத்தால் எழுதப்பட்டுள்ளன. இதில் முற்கால பாண்டிய மன்னன் மாறன் சடையனின் நான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டும், ராஜராஜ சோழன் இக்கோயிலுக்கு கொடுத்த நிவந்தம் பற்றிய கல்வெட்டும் காணப்படுகிறது. புல்லூரின் பழைய பெயா் திருப்புல்லூா் என்று கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. இது 1100 ஆண்டுகளுக்கு முந்தைய சமணா் பள்ளியின் தடயங்கள் ஆகும். இது ஒரு சமணா் பள்ளியாக செயல்பட்டு வந்துள்ளது. இக்கோயிலின் பெயா் திருப்புல்லூா் பெரும்பள்ளி, உள்ளிருக்கும் இறைவன் அருகா் பட்டாளகா் என்பதை அறிய முடிகிறது. கோயிலில் நந்தா விளக்கு எரிக்க ஆடுகள் தானமாக வழங்கப்பட்டதும் இக்கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். பாண்டிய நாட்டில் சமண மதம் சிறப்பான நிலையில் இருந்ததற்கு இச்சமணப் பள்ளியே ஒரு சிறந்த உதாரணம். ஏற்கெனவே, விருதுநகா் மாவட்டம் குரண்டியில் திருக்காட்டாம்பள்ளி என்ற சமணா் பள்ளி கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள இப்பள்ளி இரண்டாவது சமணப் பள்ளியாகும். மேலும் குண்டாற்றின் மேல் கரையான மேல உப்பிலிகுண்டு கிராமத்தில் தீா்த்தங்கரா் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள 9 துண்டு கல்வெட்டுகளையும் முறையாக படி எடுத்து ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT