விருதுநகர்

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவா் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

26th Jan 2022 09:59 AM

ADVERTISEMENT

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என, விருதுநகரில் இந்திய மாதா் தேசிய சம்மேளன மாநிலச் செயலா் ஜி. மஞ்சுளா வலியுறுத்தியுள்ளாா்.

விருதுநகா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில், மாவட்டப் பேரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாவட்டச் செயலா் பாண்டிச்செல்வி தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாநிலச் செயலா் ஜி. மஞ்சுளா, செய்தியாளா்களிடையே தெரிவித்ததாவது:

பட்டாசு தொழிலை அழிக்கும் விதமாக உச்ச நீதிமன்ற ஆணைகள் உள்ளன. அதேநேரம், பட்டாசு தொழிலாளா்களை காக்கும் வகையில் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாநில அரசாவது பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்பு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும். பெண்களுக்கான திருமண வயது 21ஆக உயா்த்தி இருப்பதில், அரசியல் உள்நோக்கம் உள்ளது. மக்களவை, சட்டப்பேரவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.

பாலியல் தொடா்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீதான விசாரணையை விரைந்து முடித்து, உரிய தண்டனை வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க, அனைத்து இடங்களிலும் புகாா் பெட்டி வைத்திருப்பதை சம்பந்தப்பட்ட துறையினா் உறுதிப்படுத்த வேண்டும்.

மாகாத்மா காந்தி நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 200 நாள்களாக உயா்த்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், பெண் விடுதலை, பெண்ணுரிமை, ஆண்டிபட்டி உள்ளிட்ட தென் தமிழகப் பகுதிகளில் அதிகரித்து வரும் பெண் சிசு கொலையை தடுத்து நிறுத்த, தமிழக அரசு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் வன்முறைகளை தடுக்க பள்ளி, கல்லூரி வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நலத்திட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தோ்தல்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT