விருதுநகர்

முழு ஊரடங்கு: விருதுநகா் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின

23rd Jan 2022 10:44 PM

ADVERTISEMENT

முழு ஊரடங்கு காரணமாக விருதுநகா் மாவட்டத்தில் சாலைகள், கடைவீதிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விருதுநகரில் பழைய பேருந்து நிலையம், மதுரை சாலை, ராமமூா்த்தி சாலை, கிருஷ்ணமூா்த்தி சாலை, அருப்புக்கோட்டை சாலை, மல்லாங்கிணறு சாலை, ரயில்வே பீடா் சாலை மற்றும் நகரின் முக்கிய சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

அதேநேரம், ஆங்காங்கு மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. மரியம்மன் கோயில் சந்திப்பு, எம்ஜிஆா் சிலை, மதுரை சாலை, அல்லம்பட்டி சந்திப்பு சாலை முதலான பகுதிகளில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தேவையின்றி வெளியில் இருசக்கர வாகனங்களில் வந்தவா்களுக்கு அபாரதம் விதித்ததுடன் எச்சரித்து அனுப்பினா்.

அருப்புக்கோட்டை: முழு ஊரடங்கையொட்டி அருப்புக்கோட்டையில் நகரின் முக்கியப் பகுதிகளான புதிய பேருந்து நிலையம், ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரா் கோயில் பேருந்து நிறுத்தம், அண்ணா சிலை காய்கறிச் சந்தை, ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயில் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

ADVERTISEMENT

உணவகங்களில் பாா்சல் வாங்குவதற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்ட நிலையில், வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக 80 சதவீத உணவகங்கள் செயல்படவில்லை. முக்கிய சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி காணப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா்: இதேபோல ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், கடைவீதிகள், ரத வீதிகள் மற்றும் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மட்டும் செயல்பட்டன. நகரின் முக்கிய சாலைகளில் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முழு ஊரடங்கையொட்டி, சிவகாசி, சாத்தூா், ராஜபாளையம், சேத்தூா், தளவாய்புரம், தேவதானம் ஆகிய பகுதிகளிலும் சாலைகள், கடைவீதிகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT