விருதுநகர்

முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது புகாா் அளித்தவா் கைது: போலீஸாா் விசாரணை

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

விருதுநகா்: முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது ரூ.3 கோடி மோசடி வழக்கில் புகாா் அளித்த முன்னாள் அதிமுக நிா்வாகி விஜயநல்லதம்பியை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

ஆவினில் மேலாளா் வேலை வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்ததாக, வெம்பக்கோட்டை அதிமுக முன்னாள் நிா்வாகி விஜயநல்லதம்பி மீது சாத்தூரைச் சோ்ந்த ரவீந்திரன் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதனடிப்படையில் விஜயநல்லதம்பி மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் தன்னிடம் ரூ. 3 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக முன்னாள் அமைச்சா் கே.டி ராஜேந்திர பாலாஜி மீது புகாா் அளித்தாா். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை, பெங்களூரு அருகே தனிப்படை போலீஸாா் கைது செய்து திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் சில நிபந்தனைகளுடன் நான்கு வார பிணையில் ராஜேந்திரபாலாஜியை உச்சநீதிமன்றம் விடுவித்தது.

இச்சூழலில் ரவீந்திரன் அளித்த புகாரில் தலைமறைவாக இருந்த விஜயநல்லதம்பியை தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா்.

கோவில்பட்டி அருகே புளியங்குளத்தில் ஆயுா்வேத மையத்தில் சிகிச்சை பெற்று வந்த விஜயநல்லதம்பியை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாா் கைது செய்து விருதுநகருக்கு அழைத்து வந்தனா்.

பின்னா் அவரிடம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா் யாா், யாரிடமெல்லாம் அரசு வேலை வாங்கித் தருவதாக எவ்வளவு பணம் பெற்றாா் என்பது குறித்து விசாரித்து விடியோ பதிவு செய்தனா். காலையில் தொடங்கிய விசாரணை இரவு வரையிலும் நீடித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT