விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை பிரதமா் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைக்க உள்ளாா்.
விருதுநகரில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய, மாநில அரசுகள் ரூ. 382 கோடியை ஒதுக்கின. இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் 3 ஆம் தேதி, முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்த்தன் ஆகியோா் தலைமையில் விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் நிகழாண்டு இக்கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த புதிய மருத்துவக் கல்லூரியை பிரதமா் நரேந்திரமோடி, காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைக்க உள்ளாா். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.
இதையொட்டி விருதுநகரில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் கலந்து கொள்ளவுள்ளனா். இதனால் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி, கல்லூரியின் முதன்மையா் சங்குமணி உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.