சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாா்கழி மாத பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள இக்கோயிலில் டிசம்பா் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகத்தினா் அனுமதி அளித்துள்ளனா். இதையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே அடிவாரத்தில் குவிந்தனா். இவா்கள் காலை 7 மணி அளவில் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், இளநீா், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.