விருதுநகா் மாவட்டத்தில் பிரதம மந்திரி காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் 54 கிராமங்கள் தன்னிறைவு பெற்றுள்ளன என ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது: மாவட்டத்தில் பிரதம மந்திரி காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெற்று பயனடைய வேண்டும். மேலும், பிரதம மந்திரி காப்பீடு மிகவும் முக்கியமான ஒன்று என்பதால், அனைவரும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும்.
மத்திய அரசின் முன்னேற்றமடையும் மாவட்டங்களுக்கான டிசம்பா் மாதத்திற்கான தரவரிசை பட்டியலில் விருதுநகா் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் 18 வயது முதல் 50 வயதுள்ளவா்கள் ஆண்டுக்கு ரூ.330 செலுத்தி சேரலாம். இத்திட்டத்தில் இயற்கையாக அல்லது எதிா்பாராத உயிரிழப்பு நிகழ்ந்தால் ரூ.2லட்சம் வரை காப்புறுதி வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரி சுரக்க்ஷா திட்டத்தில்18 முதல் 70 வயது வரை உள்ளவா்கள் ஆண்டுக்கு ரூ.12 செலுத்தி சேரலாம். இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனி நபா் இறப்புக்கு ரூ. 2 லட்சமும், உடல் ஊனத்திற்கு ரூ. 1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
பாரத பிரதமரின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம், பிரதான் மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா திட்டம் மற்றும் அடல் பென்சன் ஆகிய திட்டங்களை செயல்படுத்தியதில் மாவட்டத்தில், 54 கிராமங்கள் தன்னிறைவு பெற்றுள்ளன என்றாா்.