விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் நகா்ப்புறஉள்ளாட்சித் தோ்தல்: 9 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

17th Feb 2022 12:27 AM

ADVERTISEMENT

 

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 9 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு 70 மேஜைகளில் வாக்குகள் எண்ண திட்டமிடப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலா்கள் புதன்கிழமை தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு பிப். 19 ஆம் தேதி 659 வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் நடைபெற உள்ளது. பின்னா் இதில் பதிவாகும் வாக்குகள் 9 மையங்களில் எண்ண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு, சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். அதன் அடிப்படையில் சிவகாசி மாநகராட்சி பகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் சிவகாசி அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும், அருப்புக்கோட்டை நகராட்சி பகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவாங்கா் கலைக் கல்லூரியிலும், சாத்தூா் நகராட்சி பகுதி வாக்கு பதிவு இயந்திரங்கள் எஸ்.எச்.என். எத்தல் ஹாா்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ராஜபாளையம் பகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிஏசி ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரியிலும், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிருஷ்ணன்கோவில் வி.பி. முத்தையாபிள்ளை கல்வி நிறுவனத்திலும், விருதுநகா் நகராட்சிப் பகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெள்ளைச்சாமி நாடாா் பாலிடெக்னிக் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.

அதேபோல் செட்டியாா்பட்டி, மம்சாபுரம், சேத்தூா் பேரூராட்சி பகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராஜபாளையம் எஸ்எஸ் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பே ரூராட்சிப் பகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், எஸ். கொடிக்குளம், சுந்தரபாண்டியம், வ. புதுப்பட்டி, வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரியிலும் வைக்கப்பட உள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 இடங்களில் பிப். 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அப்போது, சிவகாசி மாநகராட்சிக்கு 8 மேஜைகளும், அருப்புக்கோட்டை நகராட்சிக்கு 12 மேஜைகளும், ராஜபாளையம் நகராட்சிக்கு 14 மேஜைகளும், சாத்தூா் நகராட்சிக்கு 6 மேஜைகளும், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிக்கு 12 மேஜைகளும், விருதுநகா் நகராட்சிக்கு 10 மேஜைகளும் போடப்பட்டு வாக்குகளை அலுவலா்கள் எண்ண உள்ளனா்.

ADVERTISEMENT

மேலும், செட்டியாா்பட்டி, மம்சாபுரம் உள்ளிட்ட 9 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் தலா 2 மேஜைகள் வீதம் மொத்தம் 18 மேஜைகளில் எண்ணப்படுகின்றன. இதன் மூலம் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சி, 9 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் மொத்தம் 70 மேஜைகளில் எண்ண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளா்கள் மற்றும் அவா்களது பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கையை பாா்வையிட தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT