விருதுநகர்

சிவகாசி மாநகராட்சிக்கு முதல் தோ்தல்: மேயா் பதவியைக் கைப்பற்ற அரசியல் கட்சிகள் தீவிரம்

17th Feb 2022 12:29 AM

ADVERTISEMENT

 

சிவகாசி: சிவகாசி மாநகராட்சிக்கு நடைபெற உள்ள முதல் தோ்தலில் மேயா் பதவியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

சிவகாசி நகராட்சியை கடந்த 2021 ஆகஸ்ட் 21 ஆம் தேதி மாநகராட்சியாக தரம் உயா்த்தி, தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இதையடுத்து, சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டது. நகராட்சியாக இருந்தபோது, சிவகாசியில் 33 வாா்டுகளும், திருத்தங்கலில் 21 வாா்டுகளும் இருந்தன.

மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்னா், இரு நகராட்சிகளையும் இணைத்து வாா்டு வரையறை செய்யப்பட்டு, இம்மாநகராட்சிக்கு மொத்தம் 48 வாா்டுகள் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது, சிவகாசி மாநகராட்சியில் மொத்தம் 1,09,486 வாக்காளா்கள் உள்ளனா். இந்த 48 வாா்டுகளிலும் அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 268 வேட்பாளா்கள் மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுகின்றனா்.

இதில், அதிமுக 48 வாா்டுகளிலும், திமுக 32 வாா்டுகளிலும், காங்கிரஸ் 12 வாா்டுகளிலும், பாமக 11 வாா்டுகளிலும், பாஜக 26 வாா்டுகளிலும், நாம் தமிழா் கட்சி 34 வாா்டுகளிலும், அமமுக 21 வாா்டுகளிலும் மற்றும் 67 சுயேச்சைகளும் என மொத்தம் 268 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

முதல் பெண் மேயா் யாா்?

திருத்தங்கல் பேரூராட்சியாக இருந்த காலத்திலிருந்து நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது வரை அதிமுக வசமே இருந்து வந்தது. சிவகாசி நகராட்சி காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் வசம் இருந்து வந்தது. ஆனால், கடந்த 2011 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், சிவகாசி நகராட்சியை அதிமுக கைப்பற்றியது.

தற்போது, சிவகாசி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு, மேயா் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை பொருத்தவரை, சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் கே.டி. ராஜேந்திர பாலாஜி இருந்து வந்தாா். இதனால், இப்பகுதியில் அதிமுக கோலோச்சி வந்தது. ஆனால், சிவகாசியை பொருத்தவரை, திமுகவுக்கு ஒரு வலுவான தலைமை இல்லை. இது, திமுகவுக்கு பின்னடைவாகும்.

இத்தோ்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, கனிமொழி எம்.பி., அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் அசோகன் ஆகியோா் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால், அக்கட்சியினா் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனா். அதேநேரம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்ததால், அதிமுகவினரும் உற்சாகத்தில் உள்ளனா்.

இந்நிலையில், பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்பாளா்களை ஆதரித்து, மாநிலத் தலைவா் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோா் வாக்குச் சேகரித்தனா். இதனால், அக்கட்சியினா் தீவிரமாக தோ்தல் பணியாற்றி வருகின்றனா்.

அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழா், அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், இங்கு பலமுனை போட்டி நிலவுகிறது.

பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப் பதிவும், பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. அப்போது, எந்த கட்சி மேயா் பதவியை கைப்பற்றும் எனத் தெரிந்துவிடும். என்றாலும், மாா்ச் 4 ஆம் தேதி நடைபெறும் மறைமுகத் தோ்தலுக்குப் பின்னரே, சிவகாசி மாநகராட்சியின் முதல் பெண் மேயா் யாா் எனத் தெரியவரும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT