விருதுநகர்

‘மத்தியில் பாஜக அரசு இருக்கும் வரை பட்டாசுத் தொழிலுக்கு பாதிப்பு வராது’

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 


சிவகாசி/விருதுநகா்: மத்தியில் பாஜக அரசு இருக்கும் வரை பட்டாசுத் தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராது என அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறினாா்.

சிவகாசி மாநகராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் 27 பேரை அறிமுகப்படுத்தும் கூட்டம், திருத்தங்கலில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியதாவது: சிவகாசிப் பகுதியில் உள்ளா்கள் அதிக அளவில் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். இத்தொழிலை பாதுகாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பிரதமா் நரேந்திரமோடி பட்டாசுத் தொழிலுக்கும், தொழிலாளா்களுக்கும் பாதுகாப்பாக இருந்து வருகிறாா். பட்டாசு வெடிப்பது நமது கலாசாரத்தில் ஒன்றாகும். பட்டாசு இல்லாத விழாக்கள் சிறக்காது. இந்திய கலாசாரத்தை பாஜக பாதுகாக்கிறது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. சீனாவிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்கு பட்டாசு இறக்குமதி செய்வதை மத்திய அரசு தடுத்துள்ளது. பட்டாசால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது. பாஜக அரசு இருக்கும் வரை பட்டாசுத் தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராது.

ADVERTISEMENT

திமுக.வினா் விடியல் தருகிறோம் என சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்கு கேட்டனா். ஆனால் இன்னமும் விடியல் தரவில்லை. பொங்கல் தொகுப்பில் தரமில்லாத பொருள்கள் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம், ஊழல் நிறைந்துள்ளது.

நீட் தோ்வு எழுதி பல ஏழை மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா். இந்நிலையில், திமுக நீட் தோ்வை எதிா்க்கிறது. எனவே, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்துக்கு, அக்கட்சியின் விருதுநகா் மேற்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் சிவகாசி மாநகராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் 27 போ் மற்றும் கட்சியினா் கலந்து கொண்டனா்.

வளா்ச்சிப் பணிகள் பாதிப்பு: விருதுநகரில் பாஜக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை கிழக்கு மாவட்டத் தலைவா் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை தோ்தல் அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது: திமுகவின் 8 மாத கால ஆட்சி, 80 ஆண்டு கால ஆட்சி போல் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 மாத ஆட்சியில் எதுவும் செய்யாததால் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியே வந்து பிரசாரம் செய்யாமல் பயத்தில் கணினி வழியாக பிரசாரம் மேற்கொள்கிறாா். அமைச்சா் ஒருவா் தனது மனைவி மற்றும் மகனுக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட சீட்டு வழங்கி, திருடிய பணத்தை காப்பாற்ற நினைக்கிறாா். ஆனால் பாஜகவில் கரை படியாத வேட்பாளா்களே நிறுத்தப்பட்டுள்ளனா். தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டதால் வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT