வத்திராயிருப்பிலிருந்து மதுரைக்கு கடத்த முயன்ற 3600 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி ராமசாமியாபுரம் அம்பேத்கா் சிலை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கூமாப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்தனா். அப்போது சரக்கு வாகனத்தில் மதுரைக்கு 3600 கிலோ ரேஷன் அரிசியை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், வாகனத்தின் ஓட்டுநரான மதுரை மாவட்டம் திருவையாலங்கேஷ்வா் கோயில் தெருவைச் சோ்ந்த திருப்பதி (30) மற்றும் மதுரை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த கணேசன் (50) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
மேலும் இதுதொடா்பாக அமைச்சியாா்புரம் காலனியைச் சோ்ந்த முத்தையா (45)என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.