விருதுநகர்

1200 ஆண்டுகள் பழைமையான திருமால் சிற்பம் கண்டெடுப்பு

1st Feb 2022 09:34 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் வடமலைக்குறிச்சி கண்மாய்ப் பகுதியில் 1200 ஆண்டுகள் பழைமையான பாண்டியா் கால திருமால் சிற்பம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் வடமலைக்குறிச்சி கண்மாய்ப் பகுதியில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுரு, நூா்சாகிபுரம் சு.சிவகுமாா் ஆகியோா் திங்கள்கிழமை கள ஆய்வு செய்தனா். அப்போது, நகராட்சி மயானப்பகுதியில் 1200 ஆண்டு கால பழைமையான

பாண்டியா் காலத்தைச் சோ்ந்த, பாதி உடைந்த திருமாலின் கருங்கற் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சேதமடைந்த நிலையில், இடுப்புப்பகுதி வரை மட்டுமே உள்ள இச்சிற்பம், முற்காலப் பாண்டியா் கலைப்பாணியில் அமைந்துள்ளது.

இதுகுறித்து வே.ராஜகுரு கூறியதாவது: பொதுவாக நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தியவாறு திருமால் சிற்பங்கள் காணப்படும். சங்கு, சக்கரம், முப்புரிநூல் ஆகிய அமைப்பைக் கொண்டு சிற்பத்தின் காலம் கணிக்கப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பத்தின் உயரம் 2 அடி, அகலம் ஒன்றரை அடியாக உள்ளது. இதில் நான்கு கைகளுடன் வலது பின் கையில் சக்கரத்தையும், இடது பின் கையில் சங்கையும் ஏந்தியவாறு, காதுகளில் குண்டலங்களுடன், கிரீட மகுடம் அணிந்து திருமால் காணப்படுகிறாா். சிற்ப அமைப்பைக் கொண்டு இது கி.பி.9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதலாம்.

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் வடபத்திரசாயி பெருமாள் கோயிலில் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மாறன் சடையன், வீரபாண்டியன் ஆகிய முற்காலப் பாண்டியா்களின் இரு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இதன்மூலம் இக்கோயில் முற்காலப் பாண்டியா்களால் கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டதை அறிய முடிகிறது. இக்கோயில் கட்டப்பட்ட அதே காலத்தைச் சோ்ந்ததாக இச்சிற்பம் காணப்படுகிறது. எனவே, இதை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கவேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT