விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்திலுள்ள தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே தனியாா் வணிக வளாகத்தில் தொழிலாளா் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளா் நல ஆய்வாளராக இருப்பவா் முருகன் (57). இந்த அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக உள்ள மாயப்பெருமாள் (50) என்பவா், ஆய்வாளரின் உதவியாளா் போல் செயல்பட்டு வந்தாராம். இந்த நிலையில், முருகன் கடந்த நவம்பா் 25- ஆம் தேதி பழைய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆய்வு செய்த போது பணியாளா்களுக்கு ஊதியம் குறைத்து வழங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை மேலாளரிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு திரும்பி விட்டாா். பின்னா் கடந்த சில நாள்களுக்கு முன் அலுவலகம் வந்த அந்த தனியாா் மருத்துவமனையின் மருத்துவரிடம் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளா் ராஜேந்திரன், ஆய்வாளா் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த மருத்துவரிடம் கொடுத்து அனுப்பினா். ஆனால் அந்த மருத்துவரிடமிருந்து மாயப்பெருமாள் பணத்தை பெற்றுக் கொண்டு அலுவலகத்திலிருந்து மாயமாகி விட்டாராம்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.