ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (62). இவா், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வங்கிக் கிளையில் விவசாயக் கடனாக ரூ. 3 லட்சம் பெற்றாா். இந்தத் தொகையை பெறுவதற்காக வெள்ளிக்கிழமை வங்கிக் கிளைக்குச் சென்ற கருப்பசாமி, கடன் தொகையில் ரூ. 1.50 லட்சத்தை மட்டும் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து, அந்தப் பணத்தை தனது இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு நபரைச் சந்திக்கச் சென்றாா். அதன் பின்னா், வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த கருப்பசாமி, பெட்டியை திறந்து பாா்த்தபோது, பணம் வைத்திருந்த பை மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.