விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயக்குமாா் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
இந்தக் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்த முன்னாள் அமைச்சா் உதயகுமாா், அங்கு தனது மகள் திருமண அழைப்பிதழை வைத்து வழிபாடு நடத்தினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்துள்ளது. பால் விலை, மின்சாரக் கட்டண உயா்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் எதிா்க்கட்சி கோரிக்கை விடுத்தால், அதை முதல்வா் ஏற்க மறுத்து வருகிறாா். தமிழக அரசின் இந்த சா்வாதிகார நடவடிக்கையைக் கண்டித்து, அதிமுக சாா்பில் நான்கு முறை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சாதாரண மக்களின் பிரதான உணவான, பால் விலை உயா்வு பொருளாதாரச் சுரண்டலாக உள்ளது.
தமிழக அரசு அறிவித்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. அதற்கான அரசாணை கூட வெளியிடப்படவில்லை. திட்டங்கள் கடைகோடி மக்களை சென்றடைகிா என ஆட்சியாளா்கள் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.