விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே குடும்பப் பிரச்னையில் தலையிட்ட மனைவியின் தம்பியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சுழி அருகேயுள்ள ஆலடிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (32). இவரது மனைவி அன்னலட்சுமி (25). இந்த தம்பதியருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த தம்பதியரிடையே குடும்பப் பிரச்னை ஏற்படும்போது, அதே ஊரில் வசிக்கும் அன்னலட்சுமியின் தம்பி பொன்ராஜ் தலையிட்டு காமராஜூடன் தகராறு செய்வாராம்.
இதனால், பொன்ராஜை தனது வீட்டுக்கு வரக்கூடாது, தனது குழந்தைகளுடன் பேசக்கூடாது என காமராஜ் கூறினாா்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் காமராஜின் வீட்டு வாசலில், அவரது குழந்தைகளுடன் பொன்ராஜ் பேசிக்கொண்டிருந்தாராம். இதைப் பாா்த்த காமராஜ் ஆத்திரமடைந்து கத்தியால் பொன்ராஜை குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். ஆனால், சிகிச்சைப் பலனன்றி பொன்ராஜ் நள்ளிரவில் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக திருச்சுழி காவல்துறையினா் வழக்கு பதிந்து காமராஜைக் கைது செய்தனா்.