விருதுநகர்

காா்த்திகை மாத பெளா்ணமி சதுரகிரி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் கடந்த திங்கள்கிழமை முதல் 4 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், அங்கு ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்ததால் பக்தா்கள் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட வில்லை. இதனால், அங்கு வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இந்த நிலையில், பௌா்ணமியையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் புதன்கிழமை அதிகாலையிலேயே கோயிலின் நுழைவுவாயில் பகுதிக்கு வந்தனா். பின்னா், காலை 7 மணிக்கு வனத் துறை நுழைவுவாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

அப்போது, அவா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. பௌா்ணமியையொட்டி, சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.

ADVERTISEMENT

பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் நாகராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT