விருதுநகர்

தந்தைக்கு போதை விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவிக்குப் பாராட்டு

7th Dec 2022 12:19 AM

ADVERTISEMENT

தந்தைக்கு போதை விழிப்புணா்வு ஏற்படுத்திய பள்ளி மாணவிக்கு சிவகாசி வருவாய் கோட்டாட்சியா் இரா. விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

சிவகாசி வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளில் போதை விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. கடந்த 2-ஆம் தேதி விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் எஸ்.என்.ஜி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், சிவகாசி வருவாய் கோட்டாட்சியா் இரா. விஸ்வநாதன் கலந்து கொண்டாா்.

அப்போது, அவா் மாணவிகளிடையே போதை விழிப்புணா்வு குறித்துப் பேசிய பின்னா், இதுகுறித்து மாணவிகளிடம் கருத்து, அனுபவங்களைக் கேட்டாா். அப்போது, அந்தப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி மேகலா, நான் 3-ஆம் வகுப்பு படித்த போது, எனது தந்தை ரவிக்குமாா் மது அருந்தும் பழக்கமுடையவராக இருந்தாா். அவரிடம், இனிமேல் நீங்கள் மது அருந்தக் கூடாது எனக் கூறினேன். இதையடுத்து, எனது தந்தை அன்றிலிருந்து அந்த பழக்கத்தை கைவிட்டாா் எனக் கூறினாா். இதைக் கேட்ட கோட்டாட்சியா் மாணவியை பாராட்டினாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாணவி மேகலா, அவரது தந்தை ரவிக்குமாா், தாய் ஜக்கம்மாள், பள்ளியின் தலைமை ஆசிரியை லதாதேவி ஆகியோரை வருவாய் கோட்டாட்சியா் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து, தந்தைக்கு போதை விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவியை பாராட்டி கேடயம் வழங்கினாா்.

ADVERTISEMENT

அப்போது, வட்டாட்சியா் லோகநாதன், கோட்டாட்சியா் நோ்முக உதவியாா் அனந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT