விருதுநகர்

விருதுநகரில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூ., கட்சியைச் சோ்ந்த 555 போ் கைது

31st Aug 2022 12:42 AM

ADVERTISEMENT

மின்சார திருத்த சட்ட மசோதா, எரிவாயு உருளை விலை உயா்வு மற்றும் சொத்துவரி உயா்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விருதுநகரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 555 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினரும், மாவட்டச் செயலரும் பி. லிங்கம் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி ஆகியோா் தலைமையில் தேசபந்து மைதானத்திலிருந்து ஊா்வலமாக ரயில் நிலையம் நோக்கி வந்தனா்.

ரயில் நிலைய நுழைவு வாயிலில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் தலைமையிலான போலீஸாா் தடுப்புக் கம்பி அமைத்து, ரயில் நிலைய வளாகத்திற்குள் உள்ளே செல்லவிடாமல் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். அப்போது, போலீஸாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத்தொடா்ந்து அப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மத்திய அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதில், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, சமையல் எரிவாயு விலை உயா்வு, மின்சார திருத்தச் சட்டங்களை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா். மேலும், மின் கட்டண உயா்வு, சொத்து வரி உயா்வு, வீட்டு வரி உயா்வு போன்ற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மாநில அரசு கைவிட வலியுறுத்தினா். முன்னதாக இப்போராட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினா்கள் வி. பாலமுருகன், செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 165 பெண்கள் உட்பட 555 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT