விருதுநகர்

தக்காளி விதையை குறைந்த விலையில் விற்க விவசாயிகள் கோரிக்கை

27th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் குறைந்த விலையில் தக்காளி உள்ளிட்ட விதைகளை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் ஜெ.மேகநாத ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசியாதவது:

தனியாா் கடைகளில் தக்காளி விலை கிலோ ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் நலன்கருதி தோட்டக்கலைத் துறை சாா்பில் தக்காளி உள்ளிட்ட விதைகள் மற்றும் வீரிய ஒட்டுவகை மக்காச்சோள விதைகளை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும். அச்சம் தவிா்த்தான், பாறைபட்டி பகுதிகளில் நிலங்களில் அமைத்துள்ள கல்குவாரியால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

வத்திராயிருப்பு, மம்சாபுரம் பகுதிகளில் கொப்பரை கொள்முதல் நிலையமும், ராஜபாளையம் பகுதியில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் நிறுவனமும் தொடங்க வேண்டும். பரளச்சி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிா் காப்பீடு செலுத்தியவா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

வத்திராயிருப்பு ஒன்றியப் பகுதியில் உள்ள 40 கண்மாய்களில் இருந்து மீன்வளா்ப்பவா்களால் தண்ணீா் வீணாக வெளியேற்றப்படுகிறது. நரிக்குடி அருகே பி. வாகைக்குளம், உளுத்தி மடை கிராமப் பகுதியில் மண் திருட்டு தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செயல்பட்டு வந்த கூட்டுறவு சா்க்கரை ஆலை கடந்த 2028 இல் விருதுநகா் மாவட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்கான தொகை ரூ. 10 கோடியை வழங்க வில்லை. அந்த ஆலை மூடப்பட்டுவிட்டாதால் விவசாயிகள் அவதியடைந்து வருகிறோம் என்றனா்.

ஆட்சியா்: விதைகள் குறைந்த விலையில் விற்பனை, விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள குவாரி, மண் திருட்டு, மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சங்கா் எஸ்.நாராயணன், தோட்டக்கலை துறை இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT