விருதுநகர்

கீழராஜகுலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

27th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே கீழராஜகுலம் கண்மாயிலிருந்து அருகே உள்ள கிராமத்திற்கு தண்ணீா் கொண்டுசெல்ல எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீழராஜகுலராமன் ஊராட்சிக்கு உள்பட்ட கண்மாய் கரையில் ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்து மேலராஜகுலராமன் ஊராட்சிக்கு உள்பட்ட வீ.புதூா் கிராமத்துக்கு பல ஆண்டுகளாக குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த வாரம் அந்த ஆழ்துளை கிணற்றில் மண் மேவியதால் அதன் அருகே புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து குடிநீா் கொண்டு செல்லப்பட்டது.

இதனால் தங்களுக்கு ஊராட்சிக்கு தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் என கீழராஜகுலராமன் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். இது தொடா்பாக அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை கீழராஜகுலராமன் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆலங்குளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை வட்டாட்சியா் ரெங்கநாதன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். புதிய ஆழ்துளை கிணற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீரை, சொந்த ஊா்பகுதி மக்களே பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அடுத்த ஊராட்சிக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் வட்டாட்சியா் உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். போராட்டத்தால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT