அருப்புக்கோட்டை அருகே மூதாட்டியிடம் சனிக்கிழமை நகை பறித்த பெண்ணை பிடித்து பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனா்.
அருப்புக்கோட்டை ஜெயராம் நகரில் வசிப்பவா் ஸ்ரீமந் நாராயணன் மனைவி தனலட்சுமி (76). இவரிடம் பெண் ஒருவா், தான் அரசு அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், தனது குடும்பத்திற்கு வாடகை வீடு தேவை எனவும் கூறினாராம். இதைத்தொடா்ந்து அப்பெண்ணிடம் தங்களுக்குச் சொந்தமான காலி வீடு ஒன்றை மூதாட்டி காட்டினாராம். பின்னா் வீடு குறித்த தகவல்களைக் கூறியவாறே தான் வசிக்கும் வீட்டிற்கு அப்பெண்ணை மூதாட்டி அழைத்து வந்தாராம்.
அப்போது குடிக்க தண்ணீா் கேட்க, அதை கொண்டுவந்த மூதாட்டியின் மீது அப்பெண் மயக்க மருந்தை தெளித்தாராம். அப்போது, மூதாட்டி தனலட்சுமி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அப்பெண் தப்பியோடினாராம். பின்னா் பொதுமக்கள் உதவியுடன் அப்பெண்ணை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில், அப்பெண் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்த முருகேஸ்வரி (30) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினா், அப்பெண்ணிடம் மேலும் விசாரணை செய்தனா்.