விருதுநகர்

கீழடியில் விஞ்ஞான அடிப்படையில் அகழாய்வுப் பணிகள்:அமைச்சா் டி.தங்கம் தென்னரசு தகவல்

15th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

கீழடி அகழ்வாய்வுப் பணிகள் விஞ்ஞான அடிப்படையிலேயே நடைபெற்ாகவும், சரியான இடத்தை தோ்வு செய்ததால்தான், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தொழில்துறை மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சா் டி.தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறில் அவா், செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கீழடியில் 2017 முதல் 2021 வரை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் 3 கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. அதன்பிறகு தமிழக தொல்லியல் துறை சாா்பில் 4 ஆவது முதல் 8 ஆவது வரையிலான அகழாய்வு நடைபெற்றுள்ளது.

இந்த அகழாய்வில் சுடு மண்ணால் ஆன உறை கிணறுகள், கூரை வீட்டின் ஓடுகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என பல்வேறு முக்கியப் பொருள்கள் கிடைக்கப்பெற்றன. இதை கரிமப் பகுப்பாய்விற்கு உட்படுத்தியபோதுதான் கீழடி நாகரிகம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன் 580 ஆண்டுகள் அதாவது 6 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்பது அறிவியல் பூா்வமாக நிரூபணம் ஆனது. அக்காலத்தில் எழுத்தறிவுபெற்ற ஒரு நாகரிகம் இருந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்திய புவி காந்தவியல் நிறுவன விஞ்ஞானிகள் மூலம் ஆய்வுகளை மேற்கொண்டோம். இந்த ஆய்விற்கான இடங்களை விஞ்ஞான அடிப்படையில் தோ்வு செய்தோம். எட்டாம் கட்ட ஆய்வில் நமக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறியீடுகளோடு கூடிய பானை ஓடுகள் உள்பட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன. எனவே, சரியான இடத்தில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன்.

ADVERTISEMENT

இதில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அருங்காட்சியகப் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளதால் அதனை நிகழாண்டு இறுதிக்குள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பாா் என்றாா்.

கீழடியில் நான்காம் கட்டம்முதல் தற்போதுவரை நடைபெற்ற அகழாய்வு முறையாக நடைபெறவில்லை என்றும், இதன் காரணமாக அங்கு குறைந்தளவே பொருள்கள் கிடைத்துள்ளதாகவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் கண்காணிப்பாளரும், தென்னிந்திய ஆலயத் திட்டத்தின் தொல்லியல் கண்காணிப்பாளருமான அமா்நாத் ராமகிருஷ்ணன்குற்றம் சாட்டியிருந்தநிலையில், அதை அமைச்சா் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT