விருதுநகர்

ஊராட்சிகளில் தலைவருக்குப் பதிலாக வேறுநபா்கள் தேசியக் கொடி ஏற்றினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

12th Aug 2022 10:37 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று ஊராட்சித் தலைவருக்கு பதிலாக வேறுநபா்கள் தேசியக் கொடியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினஅமுதப் பெருவிழாவை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும். மேலும், சுதந்திர தினத்தன்று விருதுநகா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவா்கள் மட்டுமே தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு பதிலாக வேறு நபா்கள் தேசிய கொடியை ஏற்றி குழப்பம் விளைவித்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஊராட்சிகளில் தேசியக் கொடியை ஏற்றுவது தொடா்பாக ஏதேனும் பிரச்னை இருந்தால் விருதுநகா் மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்), -740260 8260 மற்றும் 04562 - 252765 என்ற எண்ணிலும் புகாா் தெரிவிக்கலாம். தேசியக் கொடியை அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT