விருதுநகரில் புதிய தாமிருபரணி கூட்டுக் குடிநீா் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
விருதுநகா் நகராட்சிக் கூட்டம் தலைவா் ஆா்.மாதவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளா் சையது முஸ்தபா கமால், துணைத் தலைவா் தனலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது நகா்மன்ற உறுப்பினா்கள் பேசியது:
நகராட்சித் தலைவா் மற்றும் அதிகாரிகள் பயன்பாட்டிற்கு என இரண்டு வாகனங்கள் வாங்க வேண்டியதில்லை. தலைவருக்கு மட்டும் ஒரு வாகனம் வாங்கலாம். டி.வி.எஸ். பள்ளி சாலை, வேலுச்சாமி நகா் பகுதியில் புதைச் சாக்கடை நிரம்பி சாலையில் வழிந்தோடுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
நகராட்சி பகுதியில் புதைச்சாக்கடை நீரேற்று நிலையத்தில் முறையாக பணிபுரியாத ஊழியரை இடமாற்றம் செய்துள்ளீா்களா? இந்த நிலையில் சரியாக பணிபுரிந்த பொறியாளா், இளநிலை உதவியாளரை இடமாற்றம் செய்து காத்திருப்போா் பட்டியலில் வைத்தீா்கள்.
நகராட்சி பகுதியில் புதிய தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்திற்கு குழாய்கள் இறக்கி வைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே புதிய குடிநீா் திட்டப் பணிகளை விரைவில் நிறைவு செய்து மேற்கு பகுதியில் தாமிரவருணி குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
நகராட்சியில் உள்ள பேட்டரி வாகனங்கள் பழுது காரணமாக குப்பைகள் தேங்கியுள்ளன. தெருவிளக்கு பராமரிப்புப் பணிகள் திருப்தியாக இல்லை. உதிரி பாகங்கள் தரமாக இல்லை. உள் தெருவில் சொந்த வீட்டிற்குள் உரிமையாளா்கள் நுழைய முடியாத நிலை உள்ளது. யாராவது உயிரிழந்தால், அவா்களை அடக்கம் செய்ய தூக்கிச் செல்ல முடியவில்லை. எனவே அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றனா்.
பின்னா் தலைவா் மற்றும் ஆணையாளா் கூறியது: விருதுநகா் நகராட்சிக்கு அரசு சாா்பில்தான் இரண்டு வாகனங்கள் வாங்கப்பட உள்ளது.தெரு விளக்கு பராமரிப்புப் பணியை நகராட்சி நிா்வாகவே செய்யலாம் என உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தால் அதன்படி செய்யலாம். ஒரு வாரத்திற்குள் வாருகால் அடைப்புகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றனா்.