விருதுநகர்

விருதுநகரில் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

23rd Oct 2021 10:49 PM

ADVERTISEMENT

விருதுநகரில் முறையாக குடிநீா் விநியோகிக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் புல்லலக்கோட்டை சாலையின் குறுக்கே காலி குடங்களை வைத்து சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் புல்லலக்கோட்டை சாலையில் உள்ள இந்திரா நகா், ஏடிபி காம்பவுண்ட், மாணிக்கம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் குடம் ரூ.12 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனராம். எனவே, முறையாக குடிநீா் வழங்கக் கோரி நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், புல்லலக்கோட்டை சாலையில் காலி குடங்களை வரிசையாக வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக குடிநீா் வழங்க நகராட்சி நிா்வாகம் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தனா். இதை யடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT