சிவகாசியில் வெள்ளிக்கிழமை பெண்ணிடம் நகை மோசடி செய்து விட்டு தலைமறைவாகிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகாசி லிங்கபுரம் காலனியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மனைவி ஆவுடைதாய் (45). இவருக்கும் விவேகானந்தா காலனி செல்வம் மகன் மணிக்குமாருக்கும் (25) பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்ததாம். ஆவுடைதாய் தனது நகையை அடகுவைத்து மணிக்குமாருக்கு பணம் கொடுத்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஆவுடைதாய் மூன்றரை பவுன் நகையை தனது சொந்த செலவிற்கு அடகு வைத்துள்ளாா்.
இதையறிந்த மணிக்குமாா், ஆவுடைதாயிடம் மூன்றரை பவுன் நகையை திருப்புவதற்கு நான் பணம் கொடுக்கிறேன் எனக் கூறி பணம் கொடுத்தாராம். நகையை ஆவுடைதாய் திருப்பியதும், அதை வாங்கிக்கொண்டு மணிக்குமாா் சென்றுவிட்டாராம். நகையை ஆவுடைதாய் கேட்கும்போதெல்லாம், அதை அடகு வைத்திருக்கிறேன் எனக் கூறி வந்தாராம் மணிக்குமாா். பலமுறை கேட்டும் நகையை மணிக்குமாா் கொடுக்கவில்லையாம். மேலும், அவா் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆவுடைதாய் அளித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாகிய மணிக்குமாரை தேடி வருகின்றனா்.